கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மையம் திறப்பு

 
tn

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளிகள் மையத்தை திறந்து வைத்தார்.
stalin

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.2.2024) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளிகள் மையத்தை திறந்து வைத்தார். சிறப்பான மருத்துவ சேவை அளிப்பதில் முன்னோடியாக திகழும் கோவை ஜி.கே.என்.எம்.மருத்துவமனை, நவீன மருத்துவ வசதிகளுடன் 3,30,000 சதுர அடியில் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தை அமைத்துள்ளது. இந்த வெளிநோயாளிகள் மருத்துவ மையம், உடல் நலனை மதிப்பிடுதல், நோய்களை கண்டறிதல், ஆய்வக வசதிகள், வெளிநோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை வசதிகள், யோகா, நேச்சுரோபதி. அக்குபன்ச்சர் மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ சிகிச்சை வசதிகளை அளிக்கும்.

ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளிகள் மையத்தை திறந்து வைத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி

stalin

"இந்தியாவின் மருத்துவத் தலைமையகமாகத் தமிழ்நாடு உள்ள விளங்குகிறதென்றால், அது சென்னையில் உள்ள மருத்துவமனைகளின் பங்களிப்பினால் மட்டுமல்ல, சென்னைக்கு அடுத்த நிலையில் நகரங்களிலும் அத்தகைய மருத்துவக் கட்டமைப்பு இருப்பதனால்தான். அதுவும் அரசு மருத்துவமனைகளுக்கு இணையாகத் தனியார் மருத்துவமனைகளும் மக்களுக்கு மருத்துவ சேவையை அளிக்கும் காரணத்தினால்தான். அந்த வகையில், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப் போற்றப்படும் கோவை மாநகரின் பெருமைமிகு அடையாளமாக விளங்கும் லட்சுமி குழுமத்தை நிறுவிய ஜி.கே. குப்புசாமி நாயுடு அவர்களின் பெயரால் அமைந்த மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவைக் காணொலி வாயிலாகத் திறந்து வைக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் பெருமை அடைகிறேன். சேவையுள்ளம் படைத்த ஜி.கே.என் குடும்பத்தினருடன் எனக்கு நீண்ட கால நட்பு உண்டு என்பதை எண்ணி இவ்வேளையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தென்னிந்திய நிறுவனங்களில் முதல் நிறுவனமாகச் சீனாவில் இவர்கள் உற்பத்தி அலகை நிறுவி, அதன் முதல் தயாரிப்பை 2010-ஆம் ஆண்டு நான்  துணை முதலமைச்சராக இருந்தபோது ஷாங்காய் நகரத்தில் தொடங்கிவைத்ததையும் எண்ணிப் பெருமைகொள்கிறேன். 1952-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, பிரசவம் மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை மருத்துவமனையாகச் சேவையளித்து வந்த இந்த மருத்துவமனை, பின்னர் 650 படுக்கைகள் கொண்ட பல்துறை மருத்துவமனையாக விரிவுபடுத்தப்பட்டது. 73 ஆண்டுகளாக ஏழை, எளியோருக்கும் தரமான மருத்துவச் சிகிச்சையினை வழங்கி வரும் இம்மருத்துவமனைதான் கோவையின் முதல் தனியார் மருத்துவமனை ஆகும். எனினும் மக்கள் இதனையும் அரசு மருத்துவமனை என்றே கருதும் அளவுக்கு இவர்கள் இலாபநோக்கின்றி ஏழை, எளிய, நடுத்தர வகுப்பினர் என அனைவருக்குமான மருத்துவ சேவையினை அளித்து வந்துள்ளனர் என்பதுதான் இம்மருத்துவமனையின் தனிச்சிறப்பாகும்.

வளர்ந்து வரும் காலத்துக்கேற்றபடி, 3,30,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள ஒருங்கிணைக்கப்பட்ட வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தைத் தொடங்கி இந்திய அளவில் தனி முத்திரையை ஜி.கே.என்.எம் மருத்துவமனை பதித்துள்ளது. அவர்களது பணியும் தொண்டும் மென்மேலும் வளர்ந்து, தழைத்து, செழிக்கட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்." என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.