கோவை காவலரின் 'அடாவடி' வீடியோ..! ஆன்லைன் பைன் செல்லாது..மெஷின்லதான் கட்டணும்..!
கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே போக்குவரத்து போலீசார் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் மறித்தனர். அந்த ஆட்டோ ஓட்டுநர், தனது குடும்பத்தினரை சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. விதிமுறைகளை மீறியதற்காக அந்த ஓட்டுநருக்கு அபராதம் விதிக்க போலீசார் முற்பட்டனர்.
அபராதத் தொகையைத் தான் ஆன்லைன் (Online) மூலமாகச் செலுத்திக் கொள்வதாக அந்த ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பொதுவாகத் தற்போது இ-சலான் முறையில் ஆன்லைனில் அபராதம் செலுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது. ஆனால், அதற்குச் சம்மதிக்காத அங்கிருந்த போக்குவரத்து காவலர், ஆன்லைன் முறையில் செலுத்துவது செல்லாது எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அந்த காவலர், தங்களது கையில் வைத்துள்ள இயந்திரத்தில் (POS Machine) மட்டுமே அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் என ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆன்லைன் ரசீது செல்லாது என அவர் பிடிவாதமாகத் தெரிவித்ததுடன், ஓட்டுநரிடம் ஒருமையில் பேசி அடாவடியில் ஈடுபட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த மோதல் முழுவதையும் அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. அரசு ஆன்லைன் பணப்பரிமாற்றத்தை ஊக்குவித்து வரும் நிலையில், ஒரு காவலரே "ஆன்லைன் செல்லாது" எனப் பேசியிருப்பது பொதுமக்களிடையே பெரும் விவாதத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

