ஜெபராஜ் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்- சிறுமி அளித்த பகீர் வாக்குமூலம்
மத போதகர் ஜான் ஜெபராஜ் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த 164 பிரிவு வாக்கு மூலம் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்தார்.

கோவையை சேர்ந்த இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்ததாக மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது கோவை மாநகர மத்திய அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், கேரளா மாநிலம் மூணாரில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடைபெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் 17 வயது சிறுமி நீதித்துறை விசாரணை அதிகாரியிடம் வாக்கு மூலம் கொடுத்த போது, தனக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஜான் ஜெபராஜ் மனைவியின் சகோதரர் பெனட் ஹரீஸ் (32), பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. பின்னர் பெனட் ஹரீஸிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர் மீதும் போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அமைத்துள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், “மத போதகர் ஜான் ஜெபராஜ் வழக்கில் 164 பிரிவின் கீழ் சிறுமி அளித்த எழுத்துப்பூர்வமான வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஜெபராஜ் உறவினர் பெனட் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு யாரும் இந்த வழக்கில் இல்லை. வேறு நபர்கள் யாரையும் சிறுமி குறிப்பிடவில்லை. மேலும் காவல் நிலையங்களில் இளைஞர்கள் ரீல்ஸ் எடுப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் பொதுமக்களும் இளைஞர்களும் ரீல்ஸ் மோகத்தில் உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.


