பொள்ளாச்சியில் திமுக நிர்வாகியின் மகன் கடத்தல் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
பொள்ளாச்சி பகுதியில் கல்லூரி மாணவரை காரில் கடத்திய மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்த திமுக பேரூராட்சி துணைத் தலைவர் ஜாபர் அலியின் மகனான ஃபாகிம் உசேன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அவரது நண்பர்களான பாசில், விஷ்ணு ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சியை அடுத்த மீன்கரை ரோடு அருகே சென்றுள்ளார்,இருசக்கர வாகனத்தில் ட்ரிப்பிள்சில் சென்ற மூவரையும் பின் தொடர்ந்து இரண்டு கார்களில் மர்மகும்பல் வந்துள்ளது. அந்த கும்பல் மூவரையும் நஞ்சேகவுண்டன்புதூர் அருகே வழிமறித்துள்ளது. மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த ஃபாகிமை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி ஆனைமலையை நோக்கி சென்றுள்ளனர்.வழி நெடுகிலும் சுமார் 15 கிலோ மீட்டர் இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து மோசமான முறையில் ஃபாகிமை தாக்கியுள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே கடத்தி சொல்லப்பட்ட கார் குறித்து பைக்கில் வந்து மற்ற இருவர் ஃபாகிமின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கடத்தல் காரை ஆனைமலை அருகே உள்ள தாத்தூர் பிரிவு அருகே அடையாளம் கண்டு கொண்ட உறவினர்கள் அதனை பின்தொடர்ந்து ஃபாகிமை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த கும்பல் காப்பாற்ற வந்த உறவினர்களையும் தாக்கியது. காரை பின் தொடர்ந்து சென்று நீண்ட போராட்டத்திற்கு பிறகு வேட்டைக்காரன்புதூர் - ஒடையகுளம் அருகே டாணாமேடு பகுதியில் ஃபாஹிம் உறவினர்களால் மீட்கப்பட்டார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவன் உள்ளிட்ட நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.இதில் தொடர்புடைய ஆனைமலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான பிரசாத் (19),நவீன் குமார் (19), வெள்ளாள பாளையத்தைச் சேர்ந்த நிரஞ்சன் (19) மற்றும் வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (23), வெள்ளியங்கிரி (23), வசந்தகுமார் (23), விக்னேஷ் பிரதீப் (31), மதன் திவாகர் (24) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த மேற்கு காவல் நிலைய போலீசார் 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இரு வேறு கல்லூரிகளைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை பெண் ஒருவர் காதலித்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட இரு நபர்களுக்கு ஆதரவான கும்பல் இடையே கடந்த சில நாட்களாக தகராறு நடந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பொள்ளாச்சியில் உள்ள அதே கல்லூரியில் பயிலும் அப்பாவி மாணவர் ஃபாகிம் காதல் விவகாரத்தில் தொடர்புடையவர் என நினைத்து கைது செய்யப்பட்ட கும்பல் பாகிமை கடத்திச் சென்று தாக்கியது. இரு காதலர்கள் - ஒரு காதலி என முக்கோண காதல் கதையில் விவகாரத்தில் இந்த சம்பவத்திற்கு தொடர்பில்லாத ஃபாகிம் கடத்தப்பட்டு நைய புடைக்கப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


