பிரபல காமெடி நடிகர் ஜஸ்வந்த்தர் பல்லா காலமானார்..!
பிரபல பஞ்சாபி நடிகரும் நகைச்சுவை நடிகருமான ஜஸ்விந்தர் பல்லா பஞ்சாபின் மொஹாலியில் காலமானார். அவருக்கு வயது 65.
கடந்த சில மாதங்களாக பல்லா உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது திடீர் மறைவு பஞ்சாபி திரையுலகையும் அவரது ரசிகர்களையும் ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலோங்கி பகுதியில் சனிக்கிழமை அன்று அவரது உடலுக்கான இறுதி சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாபி திரையுலைச் சேர்ந்த பலரும் பல்லாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜஸ்விந்தர் பல்லா கடந்த 30 ஆண்டுகளாக நீடித்த தனது திரை வாழ்க்கையில் பல்வேறு வகையான பஞ்சாபி படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ் பெற்று விளங்கினார். துல்ஹா பட்டி போன்ற பிரபலமான நகைச்சுவைப் படத்தில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் ஜஸ்பால் பட்டி இயக்கிய இந்தி மொழி நகைச்சுவைத் திரைப்படமான மஹௌல் தீக் ஹை (1999) மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஜாட் அண்ட் ஜூலியட், சர்தார் ஜி மற்றும் கேரி ஆன் ஜட்டா போன்ற மிகப்பெரிய பஞ்சாபி வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார். கேரி ஆன் ஜட்டா என்ற மூன்று படங்களில் அட்வகேட் தில்லானாக அவர் நடித்தது அவருக்கு ஒரு அடையாள பெயராக மாறியது. அவர் தனது கதாபாத்திரங்களுக்கு வெவ்வேறு கவர்ச்சிகரமான சொற்றொடர்களைப் பயன்படுத்தி தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார், சிறிய பாத்திரங்களைக் கூட பார்வையாளர்களுக்கு மறக்கமுடியாததாக மாற்றுவதில் வல்லராக அறியப்பட்டார். கடைசியாக கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான ஷிண்டா ஷிண்டா நோ பாப்பா படத்தில் பல்லா நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


