கோவையில் வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு - மயானங்களில் சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல்
கோவை மாவட்டத்தில் நிலவி வரும் வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, மாநகராட்சி எரிவாயு மயானங்களில் சடலங்களை எரியூட்டுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 11 மின் மயானங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மின்சாரம் மற்றும் எல்.பி.ஜி (LPG) எரிவாயு மூலம் சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன. ஒரு சடலத்தை எரியூட்ட சராசரியாக 19 கிலோ எடை கொண்ட ஒரு வர்த்தக சிலிண்டர் தேவைப்படுகிறது. தற்போது நாளொன்றுக்கு சுமார் 32 சடலங்கள் வரை இங்கு எரியூட்டப்படுகின்றன. இந்நிலையில், வர்த்தக சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், மயானங்களில் இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே தேவையான சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. இதனால் எரிவாயு தகன மேடைகளின் இயக்கம் நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தற்போதுள்ள சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, மின்சாரம் மூலம் இயங்கும் 3 மயானங்களில் கூடுதல் சடலங்களை எரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்தால், பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படாமல் இருக்க பழைய முறைப்படி விறகுகளைக் கொண்டு சடலங்களை எரியூட்டவும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



