ராகுல் காந்தி குறித்து அவதூறு பேச்சு- ஹெச்.ராஜா மீது புகார்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை அவதூறாக பேசியதாக தமிழக பாஜக பொறுப்பாளர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக பொறுப்பு குழு தலைவா் ஹெச்.ராஜா சமீபத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்தும், அவரின் அமெரிக்க சுற்றுப் பயணம் குறித்தும் விமா்சனம் செய்திருந்த நிலையில் இந்திய முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்ட நிலையில் கடந்த 18ம் தேதி தமிழ்நாடு எங்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை அவதூறாக பேசிய தமிழக பாஜக பொறுப்பாளர் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி
மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.