‘ஆணவக் கொலை வன்முறை அல்ல’ என பேசிய நடிகர் ரஞ்சித் மீது விசிக புகார்
சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடிகர் ரஞ்சித் பேசி வருவதாக காவல் ஆணையரிடம் விசிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆணவக் கொலையை நியாயப்படுத்தும் வகையில் நடிகர் ரஞ்சித் பேசி வருவதாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகார் மனுவில், “நடிகர் ரஞ்சித் நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்தில் திட்டமிட்டு விசிகவை அவமானப்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளன. தணிக்கை குழுவிடம் புகார் அளித்த பின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது. சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் பேசிவரும் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஞ்சித், ஆணவ படுகொலையை நியாயப்படுத்தும் வகையிலும் அதை ஊக்குவிக்கிற வகையிலும் பொது வெளியில் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் ஆணவக் கொலை வன்முறை அல்ல என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.