"விஜய் ஓட்டுக்காக குழந்தைங்கள ஒரு கருவியாக பயன்படுத்தி இருக்காரு... தனது குழந்தை உளவியல் ரீதியாக பாதிப்பு" - தந்தை பரபரப்பு புகார்
தனது குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்க காரணமான தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி விசிக நிர்வாகி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 21 ஆம் தேதி சென்னையில் நடந்த இறுதி கட்ட பரப்புரையின் போது "விஜய் மாமாவிற்கு" உங்களுடைய பெற்றோரிடம் அடம் பிடித்து விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வையுங்கள் என கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் விஜய் வைத்த கோரிக்கையின் காரணமாக தன்னுடைய ஐந்து வயது மகன் "விஜய்யின் விசில் சின்னத்திற்கு" வாக்களிக்க அடம் பிடித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்க காரணமான விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையை சேர்த்த விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய பாலகிருஷ்ணன் கூறும் போது : வாக்கு செலுத்த சென்ற போது விசில் சின்னத்தில் வாக்களிக்க அடம் பிடித்தான். மேலும் என்னுடைய குழந்தையும் உளவியல் ரீதியாக பாதிப்படைந்துள்ளது. என் குடும்பம் மட்டும் இல்லாமல் என்னுடைய நண்பர்கள் குடும்பத்தினரும் இதுபோன்று பாதிப்படைந்துள்ளனர். உளவியல் ரீதியாகயான பாதிப்பை ஏற்படுத்த காரணமான விஜய் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

