அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு புகார்

 
Annamalai

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

eps annamalai


கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிபுரிந்த அவர், பதவியை விட்டு விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியடைந்து, பதவி உயர்வு பெற்று தமிழக பா.ஜ.க. தலைவராக அமர்ந்தவர் அண்ணாமலை. இவர், “சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்றவர்தான் இந்த பழனிசாமி.  எனக்கு நேர்மை பற்றி சொல்லித் தர எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. தவழ்ந்து காலில் விழுந்து பதவி வாங்கியவன் நான் அல்ல, மான்முள்ள விவசாயி மகன் நான். தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கவில்லை. தமிழ்நாட்டில் மிக பெரிய டெண்டர் கட்சியாகவும், கூவத்தூரில் ஏலம் விட்டு எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் கொடுத்து ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு என்னைப்பற்றி பேச என்ன தகுதி உள்ளது?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து,  எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களை இழிவாக பேசி அதன் மூலம் விளம்பரம் தேடும் அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம். எடப்பாடி பழனிசாமியை பற்றி சட்டத்திற்கு புறம்பான, கடுமையான வார்த்தைகளால் பேசுவதற்கு அவருக்கு என்ன உரிமை உள்ளது? என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் டி. அறிவரசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.