“சித்தர் சொன்னதைதான் பேசினேன்”... கைதான மகாவிஷ்ணு வாக்குமூலம்
திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு பள்ளி ஒன்றில் மாற்றுத்திறனாளிகளை அவதூறுப்படுத்தும் நோக்கில் கருத்துக்களை தெரிவித்ததாக கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து சென்னைக்கு திரும்பிய விஷ்ணுவை சைதாப்பேட்டை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு அவர் மீது BNS இல் 4 பிரிவுகளிலும், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் 2016 கீழ் 92 A 192 - கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, 196 (1) (a) சமூகத்தில் வெறுப்பான தகவல்கள் தகவல்களை பரப்புவது, 352 பொது அமைதியை குழைக்கும் வகையில் பேசுவது, 353 (2) மதம் இனம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டங்களின் கீழாக 92 (a) பிரிவின் படி மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான அட்டூழிய குற்றங்களுக்கான தண்டனை உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட மகா விஷ்ணுவிற்கு வருகின்ற 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். நீதிபதியின் தீர்ப்பை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட விஷ்ணு மீது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்கத்தின் சங்கத்தின் சார்பில் அச்சங்கத்தின் தலைவர் சரவணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் மகாவிஷ்ணு மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அடுத்ததாக இவ்வழக்கிலும் மகா விஷ்ணுவை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் அடுத்த கட்டமாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில் தான் சித்தர்கள் ஆசீர்வாதத்தால் 5 லட்சம் பாலோவர்கள் தனது யூடியூப் சேனலை பின் தொடர்வதாகவும், பரம்பொருள் பவுண்டேஷன் மூலமாக 5 நாடுகளில் இது போன்ற சொற்பொழிவுகளை ஆற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் பேசியதாகவும், இது போன்று பல இடங்களில் தான் பேசி இருப்பதாகவும் மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் சித்தர்கள் என்னிடம் பேசுவார்கள், சித்தர் சொன்னதை தான் பேசினேன், என்னை சித்தர்கள் தான் வழி நடத்துகின்றனர் என மகாவிஷ்ணு தெரிவித்துள்ளார். மேலும் பள்ளியில் நான் தான் பேசியதாகவும், தவறாக ஏதும் பேசவில்லை எனவும் நீதிபதியிடமும் மகா விஷ்ணு வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.