திருவல்லிக்கேணியில் நள்ளிரவில் சுதந்திர தினம் கொண்டாடிய காங்கிரஸ் பிரமுகர்..!
நாடு முழுவதும் நேற்று 78-வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலும், முதல்வர் ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையிலும் தேசிய கொடியேற்றி வைத்துச் சிறப்புரையாற்றினர். இதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நள்ளிரவு 12 மணிக்கு அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் நுழைவு வாயில் அருகில் சுதந்திர தின விழா நடைபெற்றது. காங்கிரஸின் பகுதி தலைவர் ஜெ.வாசுதேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நாட்டின் 78-வது நாள் சுதந்திர தினம் பிறந்தபோது, மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இது தொடர்பாகச் சிவ.ராஜசேகரன் கூறியது; “நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் சத்தியமூர்த்தி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் நுழைவாயிலில் சுதந்திர கொடியை ஏற்றிய பிறகு தான் பொதுக்கூட்டங்களுக்கோ, போராட்டங்களுக்கோ செல்வார். நாடு சுதந்திரம் அடையும்போது அவர் உயிரோடு இல்லை. 1947-ம் ஆண்டு ஆக.15-ம் தேதி சுதந்திர தினம் பிறக்கும்போது, இளைஞர் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட அந்த கொடிக் கம்பத்தில் அன்று நள்ளிரவில் 12 மணிக்குப் பெருந்தலைவர் காமராஜர் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் பிறக்கும்போது, நள்ளிரவு 12 மணிக்கு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருப்பவர் தேசிய கொடியேற்றுவது வழக்கம். அவ்வாறு இன்று நான் கொடியேற்றி இருக்கிறேன். 8-வது முறையாக இங்கு நான் கொடியேற்றி இருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது” என்று அவர் கூறினார்.