வேளச்சேரி மக்களிடம் மன்னிப்புக் கேட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ!

 
ttn

வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மௌலானா மக்களிடம் மன்னிப்பு கேட்டு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வேளச்சேரி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் சாதாரண மழைக்கே வேளச்சேரியில் மழைநீர் தேங்கும். தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வேளச்சேரி மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ராம்நகர், விஜயா நகர், பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து விட்டது. 

ttn

பாதிக்கப்பட்ட பகுதிகளை  முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலர் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். ஆனால், வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மௌலானா வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யவில்லை. இந்நிலையில் அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "வேளச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது வீட்டின் நிலைமை மிக மோசமாக உள்ளது. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் என்னுடைய குடும்பத்தினரை வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டியுள்ளது. அதற்குப் பிறகு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.


மேலும், முழங்கால் அளவுக்கு அவரது வீட்டின் வாசலில் தண்ணீர் தேங்கியிருக்கும் புகைப்படங்களையும் அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எம்.எல்.ஏ வீட்டுக்கே இந்த நிலைமையா? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அசன் மௌலானா நேற்று இந்த பதிவை வெளியிட்டிருந்த நிலையில் இன்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்து மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்.