“ஜனநாயகனுக்கு முட்டுக்கட்டை போடுவது தமிழ்நாட்டு திரையுலகம் மீது பாஜக நடத்தி வரும் தாக்குதல்”- ஜோதிமணி
ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடிப்பது போல் உள்ளது பாஜக நிலைபாடு என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

விராலிமலை செக்போஸ்ட் நியாய விலைக்கடையில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 3 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி செ. ஜோதிமணி வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, “ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழுக்கு முட்டுக்கட்டை போடுவது என்பது தமிழ்நாட்டு திரையுலகம் மீது பாஜக நடத்தி வரும் தாக்குதல். பாஜக ஆதரவு நிலைபாடு எடுக்கும் பல படங்களுக்கு சென்ஸார் போர்டு சான்றிதழ் உடனடியாக வழங்கப்படுகிறது. இன்று ஜனநாயகன் நாளை மற்றொரு படத்துக்கும் இதே நிலை ஏற்படும்.. இதை அனைவரும் கண்டிக்க வேண்டும். தமிழக அரசு மீதும் ஒன்றிய அரசு தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தேர்தல் தொடர்பான பேச்சு வார்த்தைக்கு அதிகாரப்பூர்வ குழு நியமிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய தலைமையின் நிலைப்பாடு குறித்து திமுக தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது, அந்த கருத்துக்களை கூறக்கூடாது என்று நாம் சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கருத்துக்கள் கூறுவது வழக்கம் தான். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு பற்றி திமுக தலைமைக்கு தெளிவாக தெரிய படுத்தப்பட்டுள்ளது. கூட்டணி, அதிகார பகிர்வு, சீட்டு ஒதுக்கீடு குறித்த நிலைப்பாட்டை திமுக தலைமைக்கு தெரிய படுத்தப்பட்டுள்ளது. வெளியிலிருந்து ஒருவர் கருத்து சொல்கிறார் என்பதால் அவர் கூட்டணிக்கு எதிரானவர் என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது. தனிப்பட்ட கருத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பது என்பது எப்படியாவது இந்த கூட்டணியை உடைத்து விட முடியாதா? தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழித்து விட முடியாதா? என்று நினைப்பவர்கள் மட்டுமே இந்த கருத்தை எடுத்து வைத்து கொண்டு பேசி வருகிறார்கள். எப்படியாவது தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழித்து விட முடியாதா என்று நினைப்பவர்கள் மட்டுமே சமூக நீதிக்காக, மக்களின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். வரும் தேர்தலை நாம் எப்படி எதிர்கொள்வது, மீண்டும் ஆட்சி அமைத்து மக்களின் வளர்ச்சியை மட்டுமே நாம் சிந்திக்க வேண்டும்” என்றார்.


