உதயநிதி ஸ்டாலின் எந்த மதத்தையும் இழிவுபடுத்தவில்லை- கார்த்தி சிதம்பரம்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “நடைமுறையில் பேசும்போது பாரதம் என்று பயன்படுத்துகின்றோம். அந்த வகையில் இந்தியா, பாரதம் என்பது பயன்படுத்தக்கூடிய பெயர்கள்தான். அவர்கள் பேச்சுவாக்கில்லையோ குறிப்பிடுவதற்காக சொல்லும்போதோ பாரதம் என்று பயன்படுத்தினார்கள் என்றால் எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. நடைமுறையில் இரண்டு பெயர்களையும் பயன்படுத்துகின்றோம். தமிழில் பாரதம் என்று அடிக்கடி பயன்படுத்துகின்றோம். அது வாடிக்கை தான் இந்தியா முழுவதும் பயன்படுத்துகின்றோம். ஆனால் அதிகாரப்பூர்வ பெயர் இந்தியா தான். அந்த அதிகாரப்பூர்வ பெயரை இந்த அரசாங்கம் மாற்ற நினைத்தால் பெரிய அசௌரியங்கள் செலவினங்களும் வரும்.
உதாரணத்திற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்றுதான் உள்ளது. அதனை ரிசர்வ் பேங்க் ஆப் பாரதம் என்று மாற்றினால் அனைத்து ரூபாய் நோட்டுகளையும் வாபஸ் பெற்று விட்டு புதிய ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் புதிதாக அடிக்கும் நிலை ஏற்படும். அதேபோல் பாஸ்போர்ட்டில் ரிபப்ளிக் ஆப் இந்தியா என்று தான் உள்ளது. அதனை ரிபப்ளிக் ஆப் பாரத் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றினால் அனைத்து பாஸ்போர்டுகளையும் வாபஸ் பெற்று புது பாஸ்போர்ட் கொடுக்க வேண்டும். நான் சொல்வது இந்த இரண்டு உதாரணம்தான். இது போல் 100 காரியங்கள் ஆயிரம் காரியங்கள் உள்ளது. பெரிய அளவில் செலவினங்களும் அசௌரியங்களும் ஏற்படும்.
தொழில்நுட்ப அளவிலும் பாதிப்பு ஏற்படும். இதை அவர்கள் தவிர்க்க வேண்டும். பாரத பிரதமர் பாரத குடியரசு தலைவர் என்று பேசும்போது சொல்கிறோம் பேச்சுவாக்கில் அதை சொன்னால் எந்த ஆட்சேபனையும் இல்லை. அதை அதிகாரப்பூர்வமாக அனைத்து ஆவணங்களிலும் மாற்றினால் பல்லாயிரம் லட்சம் கோடி செலவாகும். நாளைக்கு எங்களது கூட்டணி பெயரை பாரத் என்று வைத்துவிட்டால் இந்தியாவுக்கு இந்துஸ்தான் என்று பெயரை மாற்றி விடுவார்களா? இது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. இவர்களது எண்ணமே சரித்திரத்தை திருப்பி எழுத வேண்டும் என அத்தகைய காரியங்களை செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறார்களே. தவிர ஆக்கபூர்வமான சாதாரண மக்களுக்கு நலத்திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும். வளர்ச்சி திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற பாஜக அரசுக்கு எந்த ஒரு எண்ணமும் கிடையாது. அவர்கள் சமுதாயத்தை பிளக்க வேண்டும். சிறுபான்மையினரை ஒடுக்க வேண்டும். இந்து சமுதாயத்திலும் மேல்தட்டு, கீழ்த்தட்டு என்று பிரித்துப் பார்க்க வேண்டும் என்பத தான் அவர்களது எண்ணம்.
சனாதனத்திற்கு வடநாட்டில் ஒரு புரிதல் உண்டு, நமது தமிழ்நாட்டில் ஒரு புரிதல் உண்டு. பகுத்தறிவு சுயமரியாதை இந்த இயக்கங்கள் மூலமாக இந்த வார்த்தைக்கு வந்த புரிதல் சமுதாயத்தில் ஜாதி அடிப்படையில் ஏற்ற தாழ்வுகள் உள்ளது என்பதை மட்டும் தான் குறிக்கிறது. வடநாட்டில் அவர்களுக்கு வேறு ஏதாவது புரிதல் இருக்கலாம், தென்னாட்டில் நமது வழக்கத்தில், நமது மரபில், நமது இறை நம்பிக்கையில் இதற்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது. என்னைப் பொருத்தவரை தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இங்கிருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்றுதான் சொன்னாரே தவிர எந்த மதத்தையோ மத நம்பிக்கை உடையவர்களையோ வழிபாட்டையோ அவர் சொல்லவில்லை என்பது தான் எனது கருத்து” என்றார்.