தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்!

 
congress train protest

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என ராகுல் காந்தி பேசியிருந்தார். மோடி என்ற பெயரை பயன்படுத்தி ஒரு சமூகத்தையே திருடர் என கூறியுள்ளார் என குற்றம்சாட்டி ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மோடி சமூகம் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது. இதனை தொடர்ந்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில், அவரது ஜாமீன் நீட்டிக்கப்பட்டது.  

இந்நிலையில், ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.  சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.