சட்டப்பேரவையில் இன்றிரவு உள்ளிருப்பு போராட்டம் - செல்வப்பெருந்தகை

 
செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சட்டப்பேரவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று இரவு சட்டசபைக்குள் உள்ளிருப்பு போராட்டம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக தலைமைச் செயலகத்திற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து,பேரணியாக வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கண்டன பதாகைகளை ஏந்திவாரும் பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து பேரவை நிகழ்வுகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது நேரமில்லா நேரத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வபெருந்தகை கொண்டு வந்தார். அப்போது, அவர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, “ஜனநாயக படுகொலையை பிரதமர் மோடியும், பாஜக அரசும் அரங்கேற்றி இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் அசாதாரண சூழ்நிலை கொண்டு சட்டப்பேரவையில் ஒரு  தீர்மானத்தை கொண்டு வந்தோம். அப்போது பேரவை தலைவர் அப்பாவு பேசிய அனைத்தையும் அவை குறிப்பில்  இருந்து நீக்கியது வருத்தம் அளிக்கிறது. அதனால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தேன். மேலும் பேரவைக்குள் இன்று இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்றார்.