தமிழகத்தில் காங்கிரஸ்-பா.ஜக நேரடியாக மோதும் 7 தொகுதிகள்..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தற்போது தங்கள் கட்சி சார்பில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. மற்றொரு தேசிய கட்சியான பா.ஜனதா, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. பா.ஜனதா- காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தமிழகத்தில் 7 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.
அதாவது, திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 6 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து பா.ஜனதா கூட்டணியில் உள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது. ஆனால், பா.ஜனதா சின்னமான தாமரையில் களம் காண்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா - காங்கிரஸ் நேரடியாக மோதுகின்றன. விழுப்புரம் (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பா.ம.க.வும் நேரடியாக மோதுகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தற்போதைய எம்.பி. ரவிக்குமாரும், பா.ம.க. சார்பில் முரளி சங்கரும் நிற்கின்றனர். இதேபோல், திருச்சியில் அ.தி.மு.க.வும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வும் எதிர்த்து நிற்கின்றன.