"சாராய விற்பனையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்" - அண்ணாமலை

 
Annamalai

டெல்டாப் பகுதியை தொடர்ந்து வஞ்சிக்கும் திமுக ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், தக்ஷிண துவாரகா என அழைக்கப்படும் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட ராஜகோபால சுவாமி கோவில், தக்ஷிண அயோத்தியா என அழைக்கப்படும் வடுவூர் கோதண்டராம சுவாமி கோவில் என கோவில்களால் நிறையப்பட்ட புண்ணியத் தலமான மன்னார்குடியில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi  அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்கள் சூழ ஆரவாரமாக நடந்தேறியது.

Annamalai

சனாதன தர்மத்தையும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியையும் காத்து வளர்த்ததில் சைவ ஆதீனம் மற்றும் வைணவ மடங்களின் பங்களிப்பு அளப்பரியது. மடத்திற்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலத்தை நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குக் கொடுத்தார் நாங்குநேரி ஜீயர். அதே போல, மன்னார்குடி ஜீயர் சுவாமி அவர்களும், கொரோனா தொற்று காலத்தில் வீடு இல்லா மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி மனிதாபிமானத் தொண்டு ஆற்றியவர்.  தருமை ஆதீனம் அவர்களின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை திமுக தடை செய்ய முற்பட்டபோது அதற்கு எதிராக குரல் கொடுத்தவர். உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசியதற்கும் தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியவர். காவிரி தீர்ப்பாயம் அமைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் காவிரி விவசாயிகள் நலச் சங்க பொதுச்செயலாளர் ஐயா மன்னார்குடி ரங்கநாதன் அவர்கள். 1983 ஆம் ஆண்டு, காவிரி பிரச்னையைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அவர் செய்த ரிட் மனு தாக்கல் தான் காவிரி தீர்ப்பாயம் அமைய முக்கிய காரணம். நமது பாரத பிரதமர் மோடி அவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கொண்டுவந்த விவசாயச் சட்டத்தை ஆதரித்தவர். 

திருவாரூர் மாவட்டத்தில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, 58,051 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 2,11,363 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,20,830 இலவச கழிப்பறைகள், 1,00,213 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,08,016 பேருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள பிரதமரின் மருத்துவ காப்பீடு, 58,143 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 3398 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என லட்சக்கணக்கானோர் பலனடையும் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. 

Annamalai

மகாகவி பாரதியார், பாருக்குள்ளே நல்ல நாடு என்று பாடியதை, முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக நினைத்துக் கொண்டு, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார். மன்னார்குடி வடசேரியில் கடந்த 2010 ஆம் ஆண்டு, டி.ஆர்.பாலு சாராய ஆலை கருத்துக் கேட்பு கூட்டத்தில் மக்களைத் தாக்கிய கருப்பு தினம் இன்று வரை அனுசரிக்கப்படுகிறது. ஆனால், திமுகவினர் சம்பாதிப்பதற்காக, சாராய விற்பனையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். எப்படி குளத்தில் இருக்கும் தண்ணீர் சூரியனால் உறிஞ்சப்படாமல் தாமரை இலை தடுக்கிறதோ, அதே போல, தமிழக மக்களின் நலன் திமுகவால் உறிஞ்சப்படாமல் பாஜக தடுக்கும். 
திமுக காங்கிரஸ் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவிரி பிரச்சினை எழும். குறித்த நேரத்தில் காவிரியில் தண்ணீர் வராததால், இந்த ஆண்டு நெல் மகசூல் 3 லட்சம் டன் குறைந்துள்ளது. இதற்கு முழுக்க முழுக்க திமுகதான் பொறுப்பு.  தஞ்சாவூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. எஸ்.எஸ். பழனிமாணிக்கம், வெறும் 48% பாராளுமன்ற வருகையில், ஒரு கேள்வி கூட கேட்காமல், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் தன்னால்தான் வந்தது என்று கூறிக்கொள்வது நகைப்புக்குரியது. 2010 ஆம் ஆண்டு, மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்து, மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தது தான் அவரும் டி.ஆர்.பாலுவும் செய்த சாதனை. பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பிறகு, வேறு வழியின்றி, மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது திமுக. 

K Annamalai

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மன்னார்குடி தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதிகளான புறவழிச் சாலைகள், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் விவசாயக் கல்லூரி, மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகரில் பிரம்மாண்ட உலகத்தரம் வாய்ந்த உள்விளையாட்டு அரங்கம் மற்றும் நீச்சல் குளம், மன்னார்குடி தொகுதியில் தென்பரை, எடகீழையூர், ராயபுரம், காளாச்சேரி, முக்குளம்சாத்தனூர், கர்ணாவூர் ஆகிய ஊராட்சிகளில் கால்நடை மருத்துவமனை,  நவீன டிஜிட்டல் நூலகம், பெருமை வாய்ந்த மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயிலுக்கு திருப்பணிகள் குடமுழுக்கு நடத்தப்பட்டு ஹிரித்திராந்தி கிருஷ்ண தீர்த்தம் மற்றும் இதர குளங்கள் புனரமைத்தல், எடகீழையூர் வடக்கு உடையார் தெரு மற்றும் மன்னார்குடி தொகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு அரசு  நலத்திட்டங்களும், வேலை வாய்ப்புகளும் கிடைத்திட எதுவாக சாதிச் சான்றிதழ் வழங்குதல் என எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. 

டெல்டாப் பகுதியை தொடர்ந்து வஞ்சிக்கும் திமுக ஆட்சி அகற்றப்படவேண்டும். அதன் முதற்கட்டமாக, வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி முழுமையாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு 
@narendramodi அவர்கள் நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.