பார்பிகியூ சிக்கன் சமைத்ததால் விபரீதம்.. கொடைக்கானலில் 2 பேர் மரணம்..
கொடைக்கானல் அருகே பார்பிகியூ சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காததால் வெளியேறிய புகையில் மூச்சுத்திணறி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொடைக்கானல் மிகப்பெரிய மற்றும் சர்வதேச சுற்றுலாத்தலமாக இருந்து வரும் நிலையில், பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம். குறிப்பாக சனி, ஞாயிறு போன்ற வார விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. அந்தவகையில் திருச்சி மற்றும் சென்னையில் இருந்து நண்பர்களான ஜெயகண்ணன், சிவராஜ், ஆனந்தபாபு, சங்கர் ஆகிய 4 பேர் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். இவர்கள் கொடைக்கானலில் இருந்து சின்ன பள்ளம் செல்லக்கூடிய பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வாடககைக்கு தங்கியுள்ளனர்.
அப்போது பார்பிகியூ சிக்கன் சமைக்க திட்டமிட்டு அதற்காக திருச்சியில் இருந்து கொண்டு வந்த சிக்கன் மற்றும் அதற்காக சமைக்கக்கூடிய அடுப்பு கறி, அடுப்பு உள்ளிட்டவற்றை தங்கும் விடுதியிலேயே வைத்து சமைத்துள்ளர். பின்னர் நான்கு பேர் மது அருந்திவிட்டு பார்பிக்யூ சிக்கன் சாப்பிட்டுள்ளனர். அத்துடன் அடுப்பை அணைக்காமல் தூங்கச் சென்றுள்ளனர். இதில் ஜெய கண்ணன், ஆனந்த் பாபு ஆகிய இருவரும் ஒரு அறையிலும், சங்கர் , சிவராஜ் மற்றொரு அறையிலும் தூங்கியுள்ளனர்.
மற்றொரு அறையில் இருந்த நண்பர்கள் காலை வந்து எழுப்பிய போது ஜெய கண்ணன், ஆனந்த் பாபு இருவரும் எழுந்திருக்காததால் அவர்கள் ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆம்புலன்சில் வந்த செவிலியர்கள் இருவரையும் பரிசோதித்துவிட்டு உயிரிழந்தாக கூறியதை கேட்டு நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கொடைக்கானல் போலீஸார், உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பார்பிகியூ சிக்கன் சமைத்து சாப்பிட்டுவிட்டு, அடுப்பை அணைக்காததாலும், அறைகள் முழுவதும் மூடப்பட்டிருந்ததால் முழுவதுமாக புகைமூட்டம் சூழ்ந்து அதன் காரணமாக இருவரும் மூச்சு திணறி உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் கொடைக்கானல் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.