சிறார்களுக்கு பள்ளியிலேயே கொரோனா தடுப்பூசி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

 
govt


சிறார்களுக்கு பள்ளியிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது கடந்த சில நாட்களாக  அதிகரித்து வரும் நிலையில்,  உருமாறிய கொரோனா என்று சொல்லப்படும், ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் காரணத்தினாலும் ,சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.  அதன்படி ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

covaxin

இதன் காரணமாக தமிழகத்திலும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கும் என சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. அந்த வகையில் நாளை சென்னை அடுத்த போரூரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். 2007 மற்றும் அதற்கு முன் பிறந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்,  தகுதியானவர்களின் பட்டியலை அரசு தனியார் பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளி சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும்,  தகுதி உடைய சிறார்களுக்கு கோவின் செயலி மூலமாக ஆதார் கார்டு அல்லது மாணவர் அடையாள அட்டை ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

vaccine

அத்துடன் 33.45 லட்சம் பேர் தகுதியானவர்கள் என்று சொல்லப்படும் நிலையில் நாளை முதல் அடுத்த 6 நாட்களுக்குள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தடுப்பூசி செலுத்தும் பணியை ஒருங்கிணைப்பதற்காக ஆசிரியர் ஒருவரை சிறப்பு அதிகாரியாக தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டுமென்றும் , கொரோனா தடுப்பூசி செலுத்த பள்ளிகளில் போதிய இட வசதியை ஏற்படுத்தித் தருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும்  பொது சுகாதார இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே   15முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்பதிவு நேற்று முதல் துவங்கியது.  சிறார்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.