ஈரோடு இடைத்தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை - ஏற்பாடுகள் தீவிரம்

 
Erode

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. . 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு நேற்று முன் தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. .திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோல் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார்.  மொத்தம்  74.79 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான சித்தோட்டில் உள்ள சாலை போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அறைக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப்படை பாதுகாப்பு உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நாளை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதற்காக இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 15 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்படும். பின்னர் அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எண்ணப்படும், என மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உன்னி தெரிவித்தார்.