வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் - தம்பதி கைது!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் ஆனந்தன், சத்யாவதி தம்பதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஓசூர் ஏரித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 28). இவர் ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரை ஆனந்தன் என்ற வழக்கறிஞர் பின் தொடர்ந்து அரிவாளால் பலமாக பல்வேறு இடங்களில் வெட்டி உள்ளார். இதில் படுகாயமடைந்த கண்ணன், சாலையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மற்றும் சக வழக்கறிஞர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் ஆனந்தன், சத்யாவதி தம்பதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞரை வெட்டி ஆனந்தன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியையும் கைது செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.