காஞ்சிபுரத்திற்கு காரில் போதைப்பொருட்கள் கடத்திய தம்பதி கைது..!

 
1

பெங்களூருவிலிருந்து காஞ்சிபுரத்திற்கு நேற்று இரவு காரில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் சிலர் கடத்தி கொண்டு பள்ளிகொண்டா சுங்கச்சாவடி வழியாக செல்ல இருப்பதாக வேலூர் எஸ்பி மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன், பெண் காவலர் காவ்யா மற்றும் போலீசார் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் நள்ளிரவு 12 மணி முதல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் இன்று அதிகாலை 5 மணியளவில் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உள்ளிருந்தவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர்.

அதனால் சந்தேகமடைந்த போலீசார் கார் முழுவதும் தீவிர சோதனை செய்தனர். அதில் கார் சீட்டின் அடியிலும், பின் பகுதியிலும் பிளாஸ்டிக் மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, காருடன் போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரையும் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை சாலமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன்(37), அவரது மனைவி விஜியலட்சுமி(34) என்பதும், பெங்களூருவிலிருந்து காஞ்சிபுரத்திற்கு போதை பொருட்கள் கடத்துவம் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும், பெங்களூருவில் எந்த பகுதியில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் கடத்தி கைது செய்யப்பட்ட ஆனந்தன் காஞ்சிபுரம் படப்பை கிராமத்தில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடையை மனைவி விஜியலட்சுமி கவனித்து வர, கணவர் சொந்தமான நிலத்தில் விவசாயம் பார்த்து வந்துள்ளார். இதனிடையே, ஆனந்தன் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வரும்போது அங்கிருந்து அடிக்கடி குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை வாங்கி வந்து தனது கடையில் விற்பனை செய்து வந்துள்ளார். நாளடைவில் தனக்கு சொந்தமான காரிலியே போதை பொருட்களை கடத்தி வந்து வேறு கடைகளுக்கும் சப்ளை செய்ய தொடங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.