விஜயதசமியன்று கோயில்களை திறக்க வாய்ப்புள்ளதா - அரசு பதில் தர ஆணை!

 
high court

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. மற்ற 4 நாட்களில் மட்டுமே வழிபாட்டுத்தலங்கள் திறந்து இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்கக் கோரி பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. ஆனால், அதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

court

விஜயதசமி பண்டிகை  வருகிற 15ம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு விஜயதசமி அன்று கோவில்களை திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி கோவில்கள் மூடப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, மனுதாரர் தரப்பிலான கோரிக்கையை கேட்டறிந்த நீதிபதிகள், விஜயதசமி அன்று கோவிலை திறக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பிற்பகல் 1.30 மணிக்குள் பதில் தர உத்தரவு பிறப்பித்தனர்.