எஸ்.பி வேலுமணிக்கு இறுகும் பிடி; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

 
velumani

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் 10 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், அமைச்சராக இருந்தபோது வேலுமணி கோடிக்கணக்கில் டெண்டரில் முறைகேடு செய்தது அம்பலமானது. இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி கைகாட்டும் நபர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டதாகவும் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு பல கோடி மதிப்புள்ள டெண்டர்களை சட்டவிரோதமாக கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். 

sp velumani

மேலும் எஸ்.பி வேலுமணியின் தவறான நிர்வாகத்தால் தமிழக அரசு தற்போது 2,500 கோடி ரூபாய் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். அறப்போர் இயக்கமும் வேலுமணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது. பல்வேறு டெண்டர்களில் அவர் முறைகேடு செய்திருப்பதாக தெரிவித்திருந்தது. 

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வேலுமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டுமே தான் எடுத்ததாகவும் தான் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே தனது சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் டெண்டர்களை எடுத்துவிட்டதாகவும் தனது பெயரை களங்கப்படுத்த இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 10  வாரத்திற்குள் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

News Hub