எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

 
1

கடந்த 2022 ம் ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது, கரூர் பழனியப்பா நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பரிசு பொருள்கள் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிமுக அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கரூர் அதிமுக வழக்கறிஞர் மாரப்பன், முன்னாள் அமைச்சர் எம் ஆர்.விஜய்பாஸ்கர் உள்ளிட்ட 12 அதிமுகவினர் தேர்தல் அதிகாரியை தடுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக கரூர் டவுண் காவல்நிலையத்தில் எம் ஆர் விஜய்பாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது தேர்தல் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி எம் ஆர் விஜய்பாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணை வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் வினோத் குமார் ஆஜராகி, எம் ஆர் விஜய்பாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாகவும், கரூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருவதாகவும் வாதம் வைத்தார். இதை பதிவு செய்த நீதிபதி, எம் ஆர் விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து அவரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.