விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதிய சிபி சத்யராஜ்... ரசிகர்களை நெகிழ வைத்த உணர்ச்சி பதிவு!

 
1

 நடிகர் சிபிராஜ் விஜய்க்காக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த கடிதத்தில், 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி தான் விஜய்யை முதன்முதலாக சந்தித்ததாக சிபிராஜ் நினைவுகூர்கிறார். அப்போது எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் கேப்டன் விஜயகாந்துடன் சேர்ந்து, பொள்ளாச்சி சக்தி ஹோட்டல் மாடியில் நடைபெற்ற தனது தந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்த விஜய்யை பார்த்தபோது, எதிர்காலத்தில் அவர் கோடிக்கணக்கான இதயங்களை வென்று, பெரிய சக்தியாக மாறுவார் என்று தாம் நினைத்ததே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

விஜய் இனிமேல் நடிக்க போவதில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்வது இன்னும் கடினமாக இருந்தாலும், அவர் எடுத்துள்ள புதிய பாதையை மதிக்க வேண்டியது அவசியம் தெரிவித்துள்ளார். ரசிகராக மட்டுமல்லாமல், ஒரு நண்பராகவும் சகோதரராகவும் எப்போதும் விஜய்யுடன் நிற்பேன். தனது வாழ்க்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் விஜய் மிகப் பெரிய இடம் பிடித்திருப்பதாகவும், இதே உணர்வு கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் இருக்கும் என்றும் அவர் எழுதியுள்ளார். விஜய்யை நேசித்ததன் மூலமே தனக்கு பல நெருக்கமான நட்புகள் கிடைத்ததாகவும், தனது காதலியாக இருந்து பின்னர் மனைவியான ரேவதியுடன் முதல் டேட்டாக 2000 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று ஆல்பர்ட் திரையரங்கில் “ப்ரியமானவளே” திரைப்படத்தை பார்த்த அனுபவத்தையும் உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், விஜய்யை மரியாதையுடன் விரும்பிய மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்களோடு பல ஆரோக்கியமான விவாதங்களிலும் வாதங்களிலும் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் வெற்றிகளை, தனது சொந்த வெற்றிகளை போலவே கொண்டாடியதாக எழுதியிருக்கும் இந்த கடிதம், சாதாரண ரசிகர் உணர்வை தாண்டி, ஒரு ஆழமான வாழ்க்கை தொடர்பை வெளிப்படுத்துகிறது. விஜய்யுடன் கழித்த தனிப்பட்ட தருணங்களும் தனது வாழ்வின் அரிய நினைவுகள் என கூறியுள்ளார். விஜய்யின் வீட்டில் நடந்த இரவு உணவுகள், தனது லீ திரைப்பட தொடக்க விழாவில் விஜய் பங்கேற்றது, சில படங்களுக்காக வெற்றி வாழ்த்து தெரிவித்த தொலைபேசி அழைப்புகள், தாம் அழைத்தாலோ குறுந்தகவல் அனுப்பினாலோ உடனே கிடைத்த பதில்கள் - இவை அனைத்தும் தனது வாழ்க்கையில் மிகவும் பொக்கிஷமான நினைவுகள் என்று பதிவு செய்துள்ளார்.

திரைப்படப் பின்னணியில் பிறந்திருந்தாலும், சினிமாவுக்குள் வருவதற்கு முக்கிய உந்துசக்தியாக இருந்தது விஜய் தான் என்றும், விஜய்யின் படங்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல், உண்மையான காதல், நட்பு, தன்னம்பிக்கை, சுயமரியாதை, முடிவெடுக்கும் திறன் போன்ற பல வாழ்க்கை மதிப்புகளை கற்றுத்தந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, விஜய்யின் “குட்டி ஸ்டோரிகள்” பல சுயமுன்னேற்ற நூல்களை காட்டிலும் ஆழமான வாழ்க்கை பாடங்களை தந்தன என்று அவர் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும், “ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்” என்ற வசனம் வெறும் சினிமா டயலாக் அல்ல; அது விஜய்யின் வாழ்க்கை தத்துவம் என்பதையும், அதுவே ரசிகர்களுக்கும் உறுதியான பாதையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டிவருகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, கடந்த 33 ஆண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்ததற்கும், எண்ணற்ற மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்கமளித்ததற்கும் விஜய்க்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். திரையில் விஜய் தந்த எண்ணற்ற மறக்க முடியாத தருணங்கள் எப்போதும் மனதில் நிலைத்திருக்கும் என்றும், “வென்று வா தலைவா… நாங்க இருக்கோம்” என்ற வரியுடன் தனது உணர்ச்சி பதிவை நிறைவு செய்துள்ளார். இந்த திறந்த கடிதம், ஒரு நட்சத்திரத்தை பற்றிய பாராட்டாக மட்டுமல்லாமல், ஒரு மனிதன் மற்றொருவரின் வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான அழுத்தமான சான்றாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.