ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து சிபிஎம் கருப்புக்கொடி போராட்டம்..

 
CPIM கே.பாலகிருஷ்ணன்

கார்ல் மார்க்ஸ் குறித்த ஆளுநரின் சர்ச்சை பேச்சை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கார்ல் மார்க்ஸ்  குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறிய கருத்து  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அவரது கருத்து பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆளுநரின் பேச்சைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. இதில்  அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன்  மார்க்ஸ்  சித்தாந்தம் அடங்கிய புத்தகத்தை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாக கூறினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து சிபிஎம் கருப்புக்கொடி போராட்டம்..

மேலும் அவர் கூறியதாவது: “ஆளுநர் ரவி ஆளுநராக இருக்க வேண்டுமே தவிர அரைவேக்காட்டுத்தனமாக,  அரசியல்வாதியாக இருக்கக் கூடாது .  மார்க்சை பற்றி விமர்சிக்கிற தகுதி ஆர்.என்.ரவிக்கு அறவே இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். பிபிசி நடத்திய ஆய்வில் இந்த நூற்றாண்டில் தலைசிறந்த சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. உலகிலேயே தலைசிறந்த சிந்தனையாளர் என்று பிபிசியால் ஆய்வு நடத்தி  அறிவிக்கப்பட்டிருக்கிற கார்ல் மார்க்ஸை, ஆளுநர் ரவி மார்க்சியம் இந்தியாவை சிதைத்து விட்டது என்று சொல்லுவது எந்த அடிப்படையில் என்று கூற வேண்டும்” என்று கூறினார்.  முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ராமகிருஷ்ணன்,  மார்க்ஸ் மற்றும் டார்வின் குறித்து எதுவும் தெரியாமல் ஆளுநர் தவறான கருத்தை தெரிவித்துள்ளதாகவும்,  தனது பேச்சுக்கு ஆளுநர்  ரவி வருத்தம் தெரிவிக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடரும் என்றும் கூறினார்..