கடலூர் விபத்து: 'ஆயிரம் கனவுகளோரு பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் மரணம்’ - தலைவர்கள் இரங்கல்..
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ - மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இந்த மழலைகளின் மரணம் ஆற்றொணா துயரையும் வேதனையையும் தருகிறது.
இவ்விபத்தில் படுகாயமுற்றவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் உரிய சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்தில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுமாதிரியான விபத்துகள் இனியும் தொடராத வகையில் அனைத்து தரப்பிலிருந்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்.”

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: “கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் பூரண உடல்நலத்துடன் விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கேட் கீப்பரின் கவனக்குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்திருக்கும் புகார் மீது கூடுதல் கவனம் செலுத்தி இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறா வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய ரயில்வே துறையை வலியுறுத்துகிறேன். ”

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: “கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் பள்ளிக் குழந்தைகள் இருவர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
பொதுமக்கள் தினமும் கடக்கும் ரயில்வே வழிகளில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குறியது. மக்கள் எங்கு அதிகம் செல்கிறார்களோ அந்த இடங்களில் பாதுகாப்பும், எச்சரிக்கையும் கட்டாயம் இருக்க வேண்டும். இத்தகைய துயரங்களுக்கு ரயில்வே துறை முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஒன்றிய ரயில்வே அமைச்சர் நேரடியாக இச்சம்பவத்தைக் கவனித்து, பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டு மக்களின் உயிர்களை பாதுகாப்பது தான் ஒர் அரசின் முதல் கடமையாகும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சையும் பெற ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க ஒன்றிய அரசு மற்றும் ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பு முறைகளை உறுதி செய்திட வேண்டும்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


