ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்: கடலூர் தனியார் பள்ளி தாளாளர் கைது..
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 22 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருக்கிறனர்.
கைதான ஒவ்வொருவரும் முன்னணி கட்சிகளை சேர்தவர்களாகவும், வழக்கறிஞர்களாவும், ரவுடிகளாகவும் இருப்பதால் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொலைக்கான காரணம் , பின்னணியில் இருப்பவர்கள் யார் , கொலைக்கு மூளையாக செயல்பட்டது யார் என்கிற விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால் வழக்கில் சேர்க்கப்படுபவர்கள் மற்றும் கைதாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் குழந்தையை கடத்தி விடுவோம் எனவும், அவரது குடும்பத்தினரைக் குண்டுவீசி கொலை செய்துவிடுவதாகவும் கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீஸார் அவரது வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரியும் சதீஷ் என்பவர் மிரட்டல் விடுத்ததாக தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கொலை மிரட்டலுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரியவந்தது. இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக சதீஷ் பணிபுரியும் பள்ளியின் தாளாளர் அருண்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
முன்னதாக கடலூர் முதன்மை கல்வி அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தாளாளர் அருண்ராஜ் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் ஓட்டுநர் சதீஷ் சாட்சியாக இருந்திருக்கிறார். ஆகையால் சதீஷை பழிவாங்கும் நோக்கில் அவரது பெயரில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு அருண்ராஜ் கொலை மிரட்டல் விடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.