கடலூரில் பரபரப்பு : ரவுடி சுபாஸ்கர் மீது துப்பாக்கிச் சூடு..!

 
1 1

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ரமேஷ் என்பவர் நடத்தி வரும் காய்கறி கடையில், நேற்று (ஜனவரி 15) நெய்வேலியைச் சேர்ந்த சுபாஸ்கர் என்ற ரவுடி ஓசியில் காய்கறி கேட்டு மிரட்டியுள்ளார். இதற்கு ரமேஷ் மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுபாஸ்கர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். காயமடைந்த ரமேஷ் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், தாக்குதலில் ஈடுபட்டது நெய்வேலியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுபாஸ்கர் என்பது உறுதி செய்யப்பட்டது. அவரைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்நிலையில், நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் சுபாஸ்கர் பதுங்கி இருப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த தனிப்படை போலீசார் சுபாஸ்கரைச் சுற்றி வளைத்துச் சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால், போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க முயன்ற சுபாஸ்கர், தான் வைத்திருந்த பயங்கர ஆயுதத்தால் தன்னை பிடிக்க வந்த இரண்டு காவலர்களை வெட்டினார். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் போலீசார் நிலைகுலைந்தனர்.

நிலைமை மோசமானதைக் கண்ட போலீசார், தற்காப்பிற்காகத் தங்களின் துப்பாக்கியால் சுபாஸ்கரை நோக்கிச் சுட்டனர். இதில் அவரது இரு கால்களிலும் குண்டு பாய்ந்து அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதனையடுத்து, காயமடைந்த ரவுடி சுபாஸ்கர் மற்றும் அவரிடம் வெட்டுப்பட்ட இரு காவலர்களும் சிகிச்சைக்காக நெய்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.