கடலூர் ரயில் விபத்து- 13 பேரிடம் தனித்தனியாக விசாரணை
கடலூர் ரயில் விபத்து தொடர்பாக விசாரணை குழுவினர் விசாரணையை தொடங்க உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த திருச்சி கோட்ட ரயில்வே துறை சார்பில் திருச்சி ரயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணை குழுவினர் விபத்து தொடர்பாக விசாரிக்க கேட் கீப்பர், லோகோ பைலட், முதுநிலை உதவி லோகோ பைலட், ரயில் நிலைய மேலாளர், ஆலம்பாக்கம் ரயில் நிலைய இரண்டு மேலாளர்கள், கடலூர் ரயில் நிலைய மேலாளர், கடலூர் இருப்பு பாதை பகுதி பொறியாளர்கள் இரண்டு பேர், ரயில் போக்குவரத்து ஆய்வாளர், திருச்சி, கடலூர் பகுதியை சேர்ந்த தலா ஒரு முதன்மை லோக்கோ ஆய்வாளர், விபத்துக்குள்ளான பள்ளி வாகன ஓட்டுநர் என 13 நபர்களை விசாரணைக்கு நேரில் அழைத்து நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் அந்த விசாரணை குழு திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு துறைக்கான அலுவலகத்தில் இன்று தனது விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விசாரணைக்கு கேட் கீப்பர் மற்றும் பள்ளி வேன் ஓட்டுனர் தவிர மற்றவர்கள் ஆஜராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று முதல் அந்த விசாரணை நடத்தப்படும் எனவும் விசாரணையில் விபத்து தொடர்பாக விளக்கம் கேட்கப்படும் எனவும் அதில் ரயில் வந்தது முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டதா, தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா அல்லது மனித தவறினால் தான் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்து விளக்கம் கேட்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் அனைவரிடமும் முழுமையான விளக்கம் கேட்கப்பட்டு இது ரயில்வே துறை தலைமை இடத்தில் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


