குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக தடை நீட்டிப்பு..!!
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் சபரிமலை கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள், குற்றாலம் வந்து அருவிகளில் நீராடி விட்டு செல்கின்றனர்.
இதனால் குற்றாலம் அருவிகளில் கூட்டம் நிரம்பி காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ,மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் காலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


