அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..! ஐசிஐசிஐ வங்கிக்கு அடுத்து எச்டிஎஃப்சியில் கட்டண மாற்றங்கள்..!
எச்டிஎஃப்சி வங்கி முக்கியமான மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரையிலான இலவச பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடிந்தது. ஆனால் ஆகஸ்ட் 1 முதல், அந்த வரம்பு குறைக்கப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் ஆக மாற்றப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, ஒவ்வொரு கணக்கிலும் 4 இலவச பணப் பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதற்குப் பிறகு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு, ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் ரூ.5 அல்லது குறைந்தபட்சம் ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றாம் தரப்பு பணப் பரிவர்த்தனைகளின் தினசரி வரம்பு முந்தையபோலவே ரூ.25,000 ஆக இருக்கும்.
நிதி பரிமாற்றக் கட்டணங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. NEFT மூலம் 10,000 ரூபாய் வரை அனுப்பினால் ரூ.2, 10,000 – 1 லட்சம் வரை ரூ.4, 1 – 2 லட்சம் வரை ரூ.14, 2 லட்சத்துக்கு மேல் ரூ.24 வசூலிக்கப்படும். RTGS பரிமாற்றத்தில் 2 – 5 லட்சம் வரை ரூ.20, 5 லட்சத்திற்கு மேல் ரூ.45 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. IMPS பரிமாற்றங்களில், ரூ.1,000 வரை ரூ.2.5, ரூ.1,000 – ரூ.1 லட்சம் வரை ரூ.5, ரூ.1 லட்சத்திற்கு மேல் ரூ.15 வசூலிக்கப்படும்.
மேலும், ECS, ACH திருப்பிக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. முதல் முறைக்கு ரூ.450 (மூத்த குடிமக்களுக்கு ரூ.400), இரண்டாம் முறைக்கு ரூ.500 (மூத்த குடிமக்களுக்கு ரூ.450), மூன்றாவது முறையிலிருந்து ரூ.550 (மூத்த குடிமக்களுக்கு ரூ.500) வசூலிக்கப்படும். இருப்புச் சான்றிதழ், வட்டிச் சான்றிதழுக்கு ரூ.100 (மூத்த குடிமக்களுக்கு ரூ.90) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய ஆவண நகல் அல்லது காசோலை நகலுக்கு ரூ.80 (மூத்த குடிமக்களுக்கு ரூ.72) கட்டணம் வசூலிக்கப்படும்.
காசோலைப் புத்தக விதிகளிலும் மாற்றம் உள்ளது. சேமிப்புக் கணக்கில் இப்போது ஒரு வருடத்திற்கு 10 பக்கங்களைக் கொண்ட காசோலைப் புத்தகம் மட்டுமே இலவசம். முந்தைய விதியில் 25 பக்கங்கள் வழங்கப்பட்டன. புதிய வரம்பை மீறினால், ஒவ்வொரு கூடுதல் பக்கத்திற்கும் ரூ.4 கட்டணம் வசூலிக்கப்படும்.


