த.வெ.க மாநாட்டில் வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாளுக்கு கட் அவுட்..
தவெக மாநாட்டு திடலில் வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோருக்கு பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கும் 90 சதவிகிதம் பணி நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து மாநாட்டுக்கான ஏற்பாடுகள் இரவு, பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பெண்கள், ஆண்கள், மாற்றுதிறனாளிகள், முதியவர்கள் அமருவதற்கு தனித்தனியாக பார்டீசியன் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 30 மொபைல் டாய்லெட் அமைக்கும் பணியும், 300 குடிநீர் வாட்டர் டேங்க், புல் தரைகள் மீது கிரீன் மேட் போடுவதும், இருக்கைகள் அமைப்பது என அனைத்துப் பணிகளும் ஒருபுறம் நடந்து வருகிறது. ஒரே இடத்தில் பலாயிரக்கணக்கானோர் கூட உள்ளதால் தற்காலிக செல்ஃபோன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநாட்டுத்திடலில் ஏற்கனவே காமராஜர், அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களுக்கு பிரம்மாண்ட கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைவர்களின் கட் அவுட்டுக்கு இடையே விஜய்யின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரது பிரம்மாண்ட கட் அவுட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.


