சி.வி.சண்முகம் செலுத்திய ரூ.10 லட்சம் அபராதம் இதற்கு தான் பயன்படுத்தபடும் - தமிழக அரசு விளக்கம்..

 
CV Shanmugam CV Shanmugam


உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிராக அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை ரூ.10 லட்சம் அபராதத்துடன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அந்த தொகையை அரசின் திட்டத்திற்கு பயன்படுத்தப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை பயன்படுத்த அனுமதி அளிக்கக்கூடாது என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கின் மீது தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்து, சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது. இந்த அபராதத் தொகையை தமிழ்நாடு அரசுக்கு செலுத்தவும், அந்த தொகையை தமிழ்நாடு அரசு சார்பில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தவும் உத்தரவிட்டது. 

govt

இந்த உத்தரவிற்கிணங்க சி.வி.சண்முகம் அபராதத் தொகையான ரூ.10 லட்சத்தை தமிழ்நாடு அரசுக்கு செலுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு இந்த தொகையை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை வட்டாரத்தில் அதிகமாக வசிக்கும் மலைவாழ் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சுகாதார நலத்திட்டங்களுக்கும் அங்கு நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்திற்கும் பயன்படுத்தி கொள்ளவும் உத்தரவிட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.