மிரட்டும் 'டிட்வா' புயல்.. சென்னையில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை.!
டிட்வா புயல் காரணமாக டெல்டாவில் இன்றும், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்று பிற்பகலில் இருந்து நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வரையிலும் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் எனவும், அதுவும் டெல்டாவில் இன்று குறுகியநேரத்தில் தீவிர கனமழை கொட்டித்தீர்க்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதன்படி, இன்று மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டையில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த புயலினால் இன்று டெல்டா மற்றும் அதனையொட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தரைக்காற்று மணிக்கு 70 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலும், ஏனைய கடலோர மாவட்டங்களில் 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலும், நாளை தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும், ஏனைய வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் 60 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


