டிட்வா புயலால் 16 கால்நடைகள் மரணம்... 24 குடிசைகள் சேதம் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்..!
பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:-
டிட்வா புயல் சென்னையை தாக்குமா.? என்பதை வானிலை மையம் தெளிவாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் அதற்கான தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துள்ளோம். திருமண மண்டபங்களை தற்காலிக முகாம்களை மாற்ற அறிவுறுத்தியுள்ளோம்.
நாகையில் இரு பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருந்தது. மழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. புயல் கரையை கடக்கும்வரை வெளியே வரவேண்டாம் என்ற முதல்-அமைச்சரின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்.
28 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 10 குழுக்கள் பிற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரவைக்க உள்ளோம். விமானப்படை மற்றும் கடலோர காவல் படைக்கும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நாளை பாதிப்பை பொறுத்து தேவையான மாவட்டங்களுக்கு கூடுதல் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை போக்குவரத்து பாதிப்பு, உயிரிழப்பு இல்லை. 16 கால்நடைகள் மரணமடைந்துள்ளன, 24 குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. எந்தத் துறை அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்து, துறை சார்ந்த மூத்த அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை. எல்லா மாவட்டத்திலும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான நிவாரண முகங்கள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.


