திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த பெண் மகன், காதலனுடன் அழுகிய நிலையில் கண்டெடுப்பு
திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த குடியாத்ததை சேர்ந்த பெண் திருப்பதியில் மகன், காதலனுடன் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த சத்யராஜ் (30), தனது மனைவியை பிரிந்து அதே பகுதியைச் சேர்ந்த பொன்னகுட்டே நாயகி (30) என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தார். ஏற்கனவே திருமணமான பொன்னகுட்டே நாயகி தனது 3 வயது மகன் மணிஷ்டன் மூன்று மாதங்களுக்கு முன்பு சத்யராஜ் உடன் திருப்பதியில் அரசு சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வழங்கிய இந்திரம்மா அடுக்குமாடி வீட்டில் வாடகைக்கு பெற்று தங்கினர். அந்த பகுதியில் தினக்கூலி வேலைகளைச் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் இந்த மாதம் 22 ஆம் தேதி காலை முதல் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அதே நேரத்தில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் திருச்சானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுனில்குமார் மற்றும் எஸ்.ஐ. அருணா சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவுகள் திறந்து பார்த்தபோது மூவரின் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. சத்யராஜ் தூக்கில் தொங்கிய நிலையிலும், பொன்னகுட்டே நாயகி மற்றும் மணீஷ் ஆகியோரின் உடல்கள் அறையில் உள்ள கழிவறைக்கு அருகில் கிடந்தன. உடல்களுக்கு அருகில் விஷ பாட்டில் கண்டெடுக்கப்பட்டதால், பொன்னகுட்டே நாயகி, அவரது மகனும் முதலில் விஷம் குடித்து இறந்திருக்க வேண்டும். பின்னர் சத்யராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மறுபுறம், சத்யராஜ் அந்தப் பெண்ணையும் அவரது மகனையும் கொன்று தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வைத்து வழக்கு மாற்றி பதிவு செய்து விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


