பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு- அரசு மருத்துவமனையின் அவலம்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்யப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள நடுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது மனைவி ஜெயப்பிரியா. 24 வயதான இவர், கடந்த 21 ஆம் தேதி இரவு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்யப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று அந்த பெண் உயிரிழந்தார்
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் மருத்துவர்கள் தாமதமாகவும், அலட்சியமாகவும் மருத்துவம் பார்த்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண்ணுக்கு கர்ப்பபையை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அகற்றியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவர்கள் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, உறவினர்கள் பிறந்த ஆண் குழந்தையுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முன்பாக குமுளி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து இருபுறமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.