டிச. 15-ல் 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்..!
பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறைப் பயணமாக ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அழைப்பை ஏற்று வரும் டிச.15 ஆம் தேதி ஜோர்டான் நாட்டுக்குச் செல்வார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஜோர்டான் இடையிலான 75 ஆண்டுகால உறவுகளை முன்னிட்டு இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, டிச.16-ம் தேதி ஜோர்டானில் இருந்து எத்தியோப்பியா நாட்டுக்கு பிரதமர் மோடி செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில் இருநாடுகள் இடையிலான உறவுகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக, பிரதமர் மோடி டிச.17-ம் தேதி முதல் டிச.18-ம் தேதி வரை ஓமன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகள் இடையிலான உறவுகள் 70-ம் ஆண்டை எட்டியுள்ள நிலையில், ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அந்நாட்டுக்குச் செல்கிறார்.
இந்தப் பயணத்தில், இந்தியா மற்றும் ஓமன் இடையிலான வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றவுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்துடன், இது ஓமன் நாட்டுக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 2 ஆவது சுற்றுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.


