அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடப்பதாக எழுந்த புகார் - தமிழக அரசு அதிரடி முடிவு

 
tnr

மலிவு விலையில் ஏழை,  எளிய மக்கள் உணவு உண்ணும் வகையில் அம்மா உணவகம் அதிமுக ஆட்சியில் துவக்கப்பட்டது.  திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அம்மா உணவகங்கள் மூடப்படும் என்று கூறப்பட்ட நிலையில் , தொடர்ந்து அம்மா உணவகங்கள் முறையாக செயல்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  இந்த சூழலில் பல இடங்களில் அம்மா உணவகங்கள் கேட்பாரற்று  கிடைக்கின்றன என்றும் போதிய நிதி வசதி இல்லாததால் உணவு தரமானதாகவும் ,சுவையானதாகவும் ,சுகாதாரமானதாகவும் இல்லை என்றும் ஓபிஎஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம் புகார் கூறி வருகின்றனர்.

amma unavagam

குறிப்பாக  ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் குடிநீர் தொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்து இருப்பதாகவும் , உணவகத்திற்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்து பயனற்று இருப்பதாகவும், மின் விளக்குகள் மற்றும் மின் விசிறிகள் இயங்காததன் காரணமாக இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து கிடப்பதாகவும், நாய்களின் உறைவிடமாக காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது. 

amma hotel

இந்நிலையில் அம்மா உணவகத்திற்கு தேவையான புதிய பொருட்கள் வாங்க தற்பொழுது முடிவெடுக்கப்பட்டுள்ளது . உணவகத்தை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மண்டல தலைவர், சுகாதார அதிகாரிகள் , உதவி பொறியாளர்கள் இடம்பெற்ற குழுவானது அம்மா உணவகங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்கள் எவை எவை தொடர்ந்து பயன்படுத்தலாம்.  தகுதியற்ற பொருட்கள் எவை? என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  அத்துடன் பழுதடைந்த அம்மா உணவக கட்டிடங்களை சரிபார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.