போயஸ் இல்லத்தை ஒப்படைக்கக் கோரி தீபா, தீபக் மனு!
போயஸ் இல்லத்தை ஒப்படைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு அளித்துள்ளனர்.

சென்னை போயஸ் கார்டனில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலையம் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதற்கு இழப்பீட்டு தொகையாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோருக்கு அரசு சார்பில் 67.9 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து தீபா , தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வேதா நிலையம் தனிநபர் சொத்து என்பதால் ,அதை கையகப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் வாரிசுதாரர்களான தங்களிடம் சொத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களுக்குள் வீட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லத்தில் சாவியை தங்களிடம் ஒப்படைக்க கோரி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு அளித்துள்ளனர். போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலைய இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி தீபக் ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதேசமயம் மனு குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.


