செயற்கை மழை பொழிவுக்கு மத்திய அரசு அனுமதியை கோரும் டெல்லி அரசு!

 
1
அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேசிய தலைநகரில் செயற்கை மழைக்கு அனுமதிக்குமாறு டெல்லி அரசு தொடர்ச்சியாக பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு நவடிக்கை எடுக்கவில்லை. நான் மீண்டும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு கடிதம் எழுத உள்ளேன். டெல்லியில் GRAP Stage IV கட்டுப்பாடு உள்ளது. வாகன மற்றும் தொழிற்சாலை புகையைக் கட்டுப்படுத்த சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். நகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கையினை குறைக்கும் வகையில், தனியார் மற்றும் லாரிகளுக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.

புகை மூட்டத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஆராய நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். பரிசீலனையில் உள்ள தீர்வுகளில் ஒன்று செயற்கை மழை. இது காற்றிலுள்ள மாசை குறைத்து சுத்தப்படுத்துகிறது. நகரின் மோசமான மாசு நிலை மற்றும் செயற்கை மழைக்கு அனுமதி வழங்க அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு டெல்லி அரசு, மத்திய அரசுக்கு விடுத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொடர்ந்து மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு செயல்பட வேண்டும். அது அவரது தார்மிக பொறுப்பு. மத்திய அரசுடன் இணைந்து செயல்பட டெல்லி அரசு தயாராக உள்ளது. ஆனால், செயற்கை மழை குறித்து விரிவான ஆராய்ச்சி நடத்திய கான்பூர் ஐஐடி நிபுணர்கள் அடங்கிய கூட்டத்தை மத்திய அரசு கூட்டி தலைமையேற்க வேண்டும். இதற்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் அனுமதி வேண்டும்.

வட இந்தியா முழுவதும் GRAP அமல்படுத்தப்பட வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்கள் விதிகளை மீறுகின்றன. டெல்லியில் மாசு தொடர்ந்தால் GRAP IV நீடிக்கும். இதில் எந்தவித தளர்வும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.