இளையராஜா வெளியேற்றப்பட்டது குறித்து அறநிலையத்துறை விளக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் இளையராஜா தரிசனம் செய்தது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் நேற்று தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர், மணவாள மாமமுனிகள் ஜீயர் மற்றும் இசை அமைப்பாளர் இளையராஜா ஆகியோர் தரிசனம் செய்தனர். அப்போது இளையராஜா அர்த்தமண்டபத்திற்குள் சென்று பின்பு அவருக்கு அந்த விஷயம் தெரிவிக்கப்பட்ட உடன் அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறி வாசல் படியில் அருகே நின்று கோவில் மரியாதையை பெற்றுக்கொண்டார். கோவிலின் அர்த்த மண்டபத்திற்குள் முதலில் சென்ற பின்பு எதிர்ப்பு தெரிவித்த உடன் அங்கிருந்து வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்த இந்நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கோவிலின் இணை ஆணையாளர் செல்லத்துரை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இளையராஜா அர்த்தமண்டபத்திற்குள் நுழையவில்லை என்றும் படியில் ஏறி நின்று தான் சாமி தரிசனம் செய்ய முற்பட்டபோது ஜீயர் இளையராஜாவிடம் அர்த்தமண்டபம் முன்பு நின்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


