மகாளய அமாவாசை - கோவையில் மருதமலை முருகன் கோவில் உள்பட 4 கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை!

 
maruthamalai temple

மகாளய அமாவாசையை முன்னிட்டு நாளை கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவில் உள்ளிட்ட 4 முக்கிய கோவில்களில் பொதுமக்கள் தரிசனம் செய்யவும், நீர்நிலைகளில் திதி, தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை மகாளய அமாவாசை வருவதையொட்டி, பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக கோவில்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருதமலை முருகன் கோவில், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில்  மற்றும் மேட்டுப்பாளையம் மாசாணியம்மன் கோவில்கள் ஆகிய 4 கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

cbe collector

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா தொற்று பரவமால் இருக்கவும், கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் நாளை (புதன்கிழமை) மகாளய அமாவாசையன்று கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை முருகன் கோவில், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யவும், ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதியில்லை. 

ஆனால் இந்த கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பொதுமக்கள் விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.