தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க DGP உத்தரவு!

 
DGP Office DGP Office


சிவகங்கை திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக தமிழ்நாடு  முழுவதும் , காவல்துறையில் அதிகாரிகளுக்குக் கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.  

நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட  திருப்புவனம் இளைஞர் அஜித்குமார்(27) , போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார். கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்து தனிப்படை போலீஸார், அஜித்தை தாக்கும் வீடியோ காண்போரை கலங்கச் செய்கிறது.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய  6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டதை தொடர்ந்து,  5 காவலர்கள்  கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

காவல்துறை தாக்குதல்

மேலும் இளைஞர் அஜித் கொலை வழக்கை  சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.  இந்நிலையில் சிவகங்கை எஸ்.பி., ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ராமநாதபுரம் எஸ்.பி., சந்தேஷுக்கு  சிவகங்கை எஸ்.பி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  வழக்கு மாற்றப்பட்டதுடன் உடனடியாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து மானாமதுரை டி.எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  அஜித்குமாரை தாக்கிய தனிப்படை காவலர்கள்  சீருடை அணியாமல், கலர் சட்டை,  டி.சர்ட், லுங்கி என சாதாரண உடையில் இருந்துள்ளனர். காவல்துறையினர் ஒரு ரவுடி கும்பலைப் போல் செயல்பட்டுள்ளதாக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.  

 இந்நிலையில்,  திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாடு முழுவதும் , காவல்துறையில் அதிகாரிகளுக்குக் கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.   அங்கீகரிக்கப்பட்ட சிறப்புப் பிரிவுகளை தவிர்த்து எந்தவிதமான தனிப்படைகளும் செயல்படக்கூடாது. உயர் அதிகாரிகளின்  வழிகாட்டுதல் படியே முக்கியமான வழக்குகளுக்கு சிறப்பு பிரிவு அமைக்க வேண்டும் எனவும் டிஜிபி ஆணையிட்டுள்ளார்.