தமிழ்நாடு ஆறு மாதங்களில் கஞ்சா பயன்பாடற்ற மாநிலமாக மாறும்- டிஜிபி சைலேந்திரபாபு

 
dgp sylendrababu

தமிழ்நாட்டில் ஆறு மாதங்களுக்குள் கஞ்சா பயன்பாடற்ற மாநிலமாக மாறும், கஞ்சாவுக்கு எதிரான இறுதி போரிலும் வெற்றி பெறுவோம் என வேலூரில் டிஜிபி சைலேந்திரபாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tamil Nadu names senior IPS officer Sylendra Babu as new state DGP,  Government News, ET Government

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, “வேலூர் சரகத்தில் இரண்டு காவல் நிலையங்கள் கஞ்சா பயன்பாடு அற்ற காவல் நிலையங்கள் ஆக உள்ளது. வேலூர் மாவட்டம் மேல்பாடி காவல் நிலையம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் காவல் நிலையம் ஆகிய காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் கஞ்சா அறவே ஒழிக்கப்பட்டு தற்பொழுது கஞ்சா விற்பனை இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது விரைவில் 6 மாதத்தில் தமிழகம் முழுவதும் கஞ்சா இல்லா தமிழ்நாடாக மாற்றப்படும். 

கஞ்சா உள்ளிட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் போதைக்கு எதிரான போராகவே கருதுகிறோம். கஞ்சாவக்கு எதிரான முதல் போரில் வென்றுள்ளோம். இறுதி போரிலும் வெல்வோம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காவலர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்றார். 

முன்னதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திரபாபு அங்கிருந்தபடியே காவல் நிலையங்களில் உள்ள காவலர்களிடம் பணி விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அமைப்பினை பார்வையிட்ட அவர் ஜிபிஎஸ் மூலம் வாகனங்களை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து திருடு போன 348 செல்போன்கள் 124 சவரன் தங்க நகைகள் மற்றும் 101 இருசக்கர வாகனங்கள் கார் மற்றும் ஆம்புலன்ஸ் டிப்பர் லாரி உள்ளிட்ட 2 கோடி மதிப்பிலான பொருட்களை உரிமையாளர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு ஒப்படைத்தார். தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு வெகுமதிகள் வழங்கி பாராட்டினார்.

காவலர் வீரவணக்க நாளை ஒட்டி வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் காவலர் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு டிஜிபி பரிசுகள் வழங்கி பாராட்டினார்

பின்னர் வேலூர் சரக காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை மேற்கொண்டார். வேலூர் காவல் சரக்கத்தில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு முன்னேற்றத்தின் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தினர். அப்பொழுது வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரக பொறுப்பு டிஐஜி பாண்டியன் மற்றும் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.