“அப்பாவுக்கு மாரடைப்பு வந்தபோது கூட எடப்பாடி வந்து பார்க்கவில்லை”- தவெகவில் இணைந்த தனபாலின் மகன் லோகேஷ் பேட்டி
அதிமுகவில் எனது தந்தைக்கோ, மூத்த நிர்வாகிகளுக்கோ, கட்சிக்காக உழைத்தவர்களுக்கோ மரியாதை குறைவாகவே தலைமையால் நடத்தப்படுகின்றனர் என அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் பேட்டியளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டவருமான லோகேஷ் தமிழ்செல்வன் இணைந்தார். இதன் பின்னர் சென்னை, போயஸ் கார்டனில் உள்ள வாய்ஸ் ஆஃப் காமன் அலுவலகத்தில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்ததற்கான காரணங்கள் குறித்து அவருடன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய லோகேஷ், “சிறு வயதில் இருந்தே விஜய்யின் ரசிகர் நான். மக்களின் ஆதரவு விஜய்க்கு அதிகமாக உள்ளது. கொள்கை ரீதியாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டும் என்பது எனது ஆசை. இதற்காக 6-7 மாதங்கள் காத்திருந்தேன். எனது குடும்பத்தில் தனிப்பட்ட காரணங்களால் தாமதமாக இணைகிறேன்.
அதிமுகவில் எனது தந்தையோ, மூத்த நிர்வாகிகளோ, உழைத்தவர்களுக்கோ மரியாதை இல்லை. மரியாதை குறைவாகவே தலைமையால் நடத்தப்படுகின்றனர். எனது தந்தை பொறுமையாக இருந்ததால் நாட்களை கடத்திவிட்டார். திமுகவோ, அதிமுகவோ சமூகநீதியை பாதுகாக்காமல் அடிதட்டு மக்களிடம் நம்பிக்கையிழந்து வருகின்றனர். அதிமுக ஒரு நான்கைந்து பேருக்கான கட்சியாக மாறிவிட்டது. நிறைய பேர் இதேபோல மன வருத்தத்தில் இருக்கிறார்கள். என்னுடைய அப்பா இங்கே வரமாட்டார். அவர் அதிமுகவின் விசுவாசி. நேற்றுதான் தவெகவில் இணைய அப்பாவின் சம்மதத்தைப் பெற்றேன். அப்பாவின் நிர்பந்தத்தால் இவ்வளவு நாள் அதிமுகவில் இருந்தேன். கட்சிக்குள் எங்கள் குடும்படததுக்கென பெரும் மன வருத்தம் இருந்தது. ஜூலை மாதத்தில் என்னுடைய தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. எடப்பாடி உட்பட கட்சியிலிருந்து யாரும் நேரில் வந்து பார்க்கவில்லை. எங்களை முதுகில் குத்தினார்கள். எங்களுக்கு நிறைய மனக்கசப்புகள் இருக்கிறது. எல்லாவற்றையும் வெளியில் பேச முடியாது. அதிமுக- பாஜக உடன் கூட்டணி வைத்ததால் மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர். ஜெயலலிதாவோ, எம்.ஜி.ஆர் இந்த மாதிரி கட்சியை நடத்தவில்லை. குறிப்பிட்ட மக்களுக்கான அரசியலாக அதிமுகவின் அரசியல் நடக்கிறது. அதனால் அதிமுகவின் தொண்டர்கள் மிகவும் சோர்ந்து போயுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்படலாம்” என்றார்.

